Pages

Saturday, September 14, 2013

தயான் சந்த் எனும் சகாப்தம்

Dhyan Chand
இந்தியாவுக்கு விடுதலை கிடைப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது.

அந்த எளிய பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த இளைஞன் ஒரு ஹாக்கி போட்டியை பார்க்கப்போனான்.
போட்டியில் ஆங்கிலேயர்களின் ஆதரவு பெற்ற அணிக்கு எதிரான அணியை அவன் உற்சாகபடுத்த... ஆங்கிலேய அதிகாரி கடுப்பாகி விட்டார். நீ வேண்டுமானால் ஆடேன் பார்க்கலாம்... என்று நக்கலாக சொல்ல அந்த போட்டியில் களம் இறங்கி அவன் அடித்த கோல்கள் நான்கு.

மிகப் பிரகாசமான மின்விளக்குகள் இல்லாத காலத்தில், நிலவொளியில் பயிற்சி செய்யும் பழக்கம் சந்துக்கு உண்டு. இந்திய அணி ஒன்று நியூசிலாந்து அணியுடன் மோத முதல் முறையாக தேர்வானது. அதில் இவரும் இடம் பெற்றார். எண்ணற்ற போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி கலக்கி எடுத்தது. அந்தப் போட்டித் தொடரில் மொத்தம் 192 கோல்களை இந்திய அணி அடித்தது. அந்த கோல்களில் நூறு கோல்கள் சந்த் அடித்தது. ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற எல்லா போட்டியிலும் (பதினெட்டு )
இந்தியா வென்றிருந்தது.

டான் பிராட்மன் இவரின் ஆட்டத்தை பார்த்துவிட்டு நாங்கள் ரன் அடிப்பது போல இவர் கோல் அடிக்கிறார் என்று வியந்திருக்கிறார்

இங்கிலாந்து அணி தான் அதற்கு முந்தைய ஒலிம்பிக்கில் சாம்பியன். இந்திய
அணி இங்கிலாந்தில் போய் கலந்து கொண்ட பதினொரு போட்டியிலும் வென்று விடவே ஒலிம்பிக் போட்டிக்கு இங்கிலாந்து அணிக்கு பதிலாக இந்தியா போனது. இறுதிப்போட்டிக்கு முந்தைய எல்லா போட்டிகளிலும் வென்றிருந்த இந்திய அணி மொத்தம் 26 கோல்கள் அடித்தது. அதில் பதினோரு கோல்கள் நம் நாயகன் அடித்தது.

இறுதிப்போட்டி ஹாலந்து நாட்டின் தலைநகரில் ஹாலந்து அணிக்கு
எதிராக நடந்தது. சொந்த ஊர் உற்சாகத்தோடு ஆடிய அந்த அணியை மூன்றுக்கு பூஜ்யம் என்று இந்தியா வென்று முதல் தங்கத்தை பெற்றது. தயான் சந்த் அடித்தது இரண்டு கோல்கள். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள சென்ற பொழுது வழியனுப்ப வெறும் மூன்றே பெயர்கள்தான் இருந்தார்கள். பதக்கத்துடன் திரும்பிய பொழுது பம்பாய் நகரே ரசிகர்களால் நிரம்பி இருந்தது.

அடுத்த ஒலிம்பிக்கிலும் கலக்கி எடுத்தது இந்திய அணி. இறுதிப் போட்டியில் அமெரிக்காவை கதற விட்டார்கள். இருபத்தி நான்கு கோல்கள் அடித்தது இந்திய அணி அமெரிக்க அணியோ ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தார்கள். இதில் சந்த் எட்டு கோல்கள், அவரின் தம்பி பத்து கோல்கள் என அடித்தார்கள்.

இங்கிலாந்து அரசி ஒரு முறை இவரிடம் அவரின் குடையை கொடுத்து விளையாட சொல்ல அதிலும் கோல் அடித்திருக்கிறார் தயான்சந்த்!

பெர்லின் ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்த பொழுது முப்பத்தி ஒரு வயது அவருக்கு. தோல்வி என்பது என்னவென்றே தெரியாத இந்திய அணி பயிற்சி போட்டிகளில் தோற்றிருந்தது. முறையான சீருடைகள், காலணிகள் என எதுவும் இல்லாமலும், ரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயண‌ம் செய்து வந்து இறங்கிய களைப்பு தீருவதற்குள் ஜெர்மனியுடனான ப‌யிற்சி போட்டியில் கலந்து கொண்டது இந்திய அணி. 4/1 என்று அணி தோற்றது. இருந்த போதிலும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் சிறப்பக விளையாடி இறுதிப்
போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

பெர்லின் நகரில் இறுதிப்போட்டி...
ஹிட்லர் தனது நாட்டு அணியின் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வத்துடன் அமர்ந்து இருந்தார். ஏற்கனவே இந்தியாவை தோற்கடித்த கம்பீரத்தோடு இருந்தது ஜெர்மனி அணி. இந்திய அணியினர் காங்கிரஸ் கொடியை வணங்கிவிட்டு களம் புகுந்தார்கள். முதல் பாதியில் இந்திய அணி ஒரே ஒரு கோல் தான் அடித்தது.

தயான் சந்த் தான் அணிந்திருந்த காலணியை கழற்றி எறிந்தார். வெறுங்கால்களோடு ஆட்டக்களத்தில் புகுந்தார். பார்வையாளர்களின் ஆர்ப்பரிப்பு, வியர்வை எல்லாமும் வழிய அவர் அங்கே அவரது கால்களும் கைகளும் குறிப்பாக ஹாக்கி மட்டையும் மாயஜாலம் செய்தது... மூன்று கோல்களை அவர் அடிக்க இந்தியா மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கத்தை வென்றது.

தயான் சந்த் ரயில்வே தண்டவாளங்களில் பந்தை இரண்டு கிலோமீட்டர்
தூரத்துக்கு அடித்துக்கொண்டே சென்று பயிற்சி செய்வார் என்று சொல்வார்கள்.

உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பரவச்செய்தவரை வறுமை வாட்டிகொண்டு இருந்தது.. அவருக்கு ஒரே ஆறுதலாக இருந்தது வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடித்தல் ஆகிய பொழுது போக்குகளே.

யாராலும் கண்டுகொள்ளப்படாமல் ஒரு மருத்துவமனையின் ஜெனரல் வார்டில் கல்லீரல் புற்றுநோயால் இறந்து போனார்..!

நீண்ட நெடுங்காலம் கழித்து அவரது மகன் ஆக்லாந்து நகருக்குப் சென்ற பொழுதுதான் தயான் சந்த்தின் அருமை புரிந்தது... தான் விளையாடிய போட்டிகளில் எல்லாம் பார்வையாளர்களை தனது ஹாக்கி மட்டையின் மாயாஜாலத்தால் பிரமிக்க வைத்த அவரைப்பற்றிய குறிப்புகள் காணப்பட்டது வியப்பை ஏற்படுத்தும் விஷயம்.

வியன்னாவில் நான்கு கரங்கள் ஒவ்வொன்றிலும் ஹாக்கி ஸ்டிக்களை ஏந்தி ஒரு சிலை சிரிக்கிறது. அது தயான் சந்த் எனும் சகாப்தம்..!

இவரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஐ தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.

Banuchandar

Tuesday, September 10, 2013

மக்கள் தலைவர்

காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.

காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.

நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள்.

காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.

தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகையாகும்.

தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்

காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.

காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.

பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.

Banuchandar

காலச் சரித்திரம் - காமராஜர்

தன் பாட்டி மரணத்திற்குப் பின், தோளில் துண்டு அணிந்தவர்
தன் நாட்டின் வறுமைக்கு, வளங் கண்டு விட்டவர்


பதவியில் இருக்கும்போது கடமையாற்றச் சொல்பவர்
உதவிபல மக்களிடையே செய்ய குறைகள் கேட்கச் சொன்னவர்


கொள்கையில் உறுதிகொள்வதற்கே தன்னருமைக்கோட்பாட்டில்
தொண்டர்களை இட்டுச் செல்பவர்


வடக்கே காந்தி – தெற்கே காமராஜ்
மக்கள் வாசகமிது


வரும் உயர் பதவி
தென்னாட்டுக் காந்தியின் புகழ்வாசகமிது


எதிரியை மன்னிக்கும் நல்ல பண்பாளர்
நற்குணத்தால் உதிர்த்திடும் இனிய சொற்களின் அன்பானவர்


காமராஜரின் எளிமையில் ஓர் வலிமை
அவர்காட்டும் புதுமையில் ஓர் இனிமை


இவர் ஒரு காலச் சரித்திரம்

Banuchandar

அரசியல்

காமராஜர்
அரசியல் பூந்தோட்டமாய் இருந்தது
நீங்கள் வேராய் இருந்ததால்.

அரசியல் மாளிகையாய் நிமிர்ந்தது
நீங்கள் அடித்தளமாய் இருந்ததால்.

அரசியல் மக்களின் ஒளியாய் இருந்தது
நீர், வழங்குவதில் பாரியாய் இருந்ததால்.

அரசியல் புனிதமாய் இருந்தது
நீர், மனிதமாய் இருந்ததால்.

அரசியல் தூய்மையாய் இருந்தது
நீர், கதராடையை உடுத்தியிருந்ததால்.

அரசியல் இமயமலையாய் இருந்தது
நீர், பண்பின் இமயமாய் இருந்ததால்.

அரசியல் ஏழையின் கோவிலாய் இருந்தது
நீர், இலவசக்கல்வியின் தீபமாய் இருந்ததால்.

அரசியல் விண்மீனாய் இருந்தது
நீர், வானமாய் இருந்ததால்.

அரசியல் வைரமாளிகையாய் இருந்தது
நீர், வாடகைவீட்டில் இருந்ததால்.

அரசியல் பொற்காலமாய் இருந்தது
நீர், சொக்கத்தங்கமாய் இருந்ததால்.

காமராஜ்யமே எல்லை

அன்னை சிவகாமியின் அருமைப் புதல்வன்

உன்னைப் பெற்றவள் பெருமை பெற்றவள்

உண்மை நிலைத்திட உலகே போற்றிட

தன்னையே மறந்து நன்மைகள் செய்தாய்!


பரந்த நெற்றியின் படுக்கைக் கோடுகள்

படிக்காத மேதையின் மிடுக்கான ஏடுகள்

தடித்த உதட்டில் தடிக்காத வார்த்தைகள்

துடிக்கும் இதயத்தில் துவளும் தத்துவங்கள்!


கூர்ந்த பார்வையில் கூரான அர்த்தங்கள்

உயர்ந்த மனிதனின் உயர்வான எண்ணங்கள்

நரைத்த மீசைக்குள் நரைக்காத கருத்துக்கள்

விரைத்த நடையின் அரசியல் விவேகமோ!


கருப்பு நிறமே மேனியில் எங்கும்

வெறுப்பு நீங்கிய வெள்ளை உள்ளம்

கரும்பு இனிப்பும் வெட்கம் கொள்ளும்

குறும்பு சிரிப்பில் குழந்தையே கொஞ்சும்!


காமத் துறவியே நீயா காமராஜன்?

காமம் வென்றதன் காரணப் பெயரோ!

கிராம ராஜ்யம் ராம ராஜ்யமாக

காம ராஜ்யமே சாம் ராஜ்யமானது!



விரிந்த புருவத்தை வில்லாக வளைத்து

செரிந்த பார்வையே அம்பெனத் தொடுத்து

தவிக காமனைப் பற்றி எரித்தாய்

உதவிக் கரத்தால் உயர்ந்தாய் நாட்டில்!



பதவி பேராசை பிடித்த நாட்டில்

பதவித் துறவியென பதித்தாய் ஏட்டில்

பதவி தேடி உதவிகள் செய்யாது – உன்

உதவி நாடி பதவிகள் வந்தது!



இந்திய நாட்டிற்கு இமயமே பெருமை – நீ

சிந்திய வியர்வை மண்ணுக்கு வளமை

முந்தியும் இல்லை பிந்தியும் இல்லை

இந்திய பூமிக்கு காமராஜ்யமே எல்லை!


Banuchandar